In Germany, women are allowed to swim topless in swimming pools in the capital Berlin

ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடை இன்றி குளிக்க அனுமதி

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்தாண்டு பெண்கள் நீச்சல் குளங்களில் குளிப்பது தொடர்பாக ஒரு சர்ச்சை கிளம்பியது. கடந்தாண்டு உள்ளூர் நீச்சல் குளம் ஒன்றில் பெண் ஒருவர் மேலாடை இன்றி குளித்துள்ளார். பெண்ணான நீங்கள் மேலாடை இன்றி குளிக்க கூடாது என நிர்வாகிகள் கூற, அதற்கு தான் ஒரு ஆண் என அடையாளப்படுத்தியுள்ளார். ஆனாலும், அவரை நிர்வாகிகள் நீச்சல் குளத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். இது அந்நாட்டு பெண்களிடையே விவாதத்தை கிளப்பியது.

ஆண்கள் மேலாடை இன்றி குளிக்கும் போது பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு என கேள்வி எழவே, இந்த விதிக்கு தளர்வு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக ஒலித்தது. நீச்சல் குளங்களில் மேலாடை போடுவதும், போட வேண்டாம் என்பதும் பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப விட வேண்டும் என போராட்டம் தொடங்கவே, சில நகரங்களில் விதிகளை திருத்தி பெண்கள் மேலாடை இன்றி நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த புதிய விதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அமலுக்கு வந்துள்ளது. ஜெர்மனியில் சுதந்திர உடல் இயக்கம் என்ற புகழ்பெற்ற இயக்கம் உடல் சுதந்திரத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த புதிய உத்தரவை அந்த இயக்கம் வரவேற்றுள்ளது.