உலக நிமோனியா தினம் இன்று.! நிமோனியா வருவதற்கு ஒரு முக்கியக் காரணம்..!! தெரிந்து கொள்வது அவசியம்..!!!

நுரையீரலில் கிருமித்தொற்றால் பெரியவர்களைக் காட்டிலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே நுரையீரல் கிருமித்தொற்றால் அதிகம் பலியாகின்றனர் என்பதுதான் அதிர்ச்சி. உயிரிழப்பின் எண்ணிக்கையில் முதல் இடம் இந்தியாவுக்கே.

நுரையீரலில் ஏற்படும் கிருமித்தொற்று, நிமோனியா வருவதற்கு ஒரு முக்கியக் காரணம். இதுபற்றி விரிவாக அறிந்துகொள்ள வாங்க.....

நம் உடலின் சீரான இயக்கத்துக்கு முக்கியப் பங்கு, திசுக்களுக்கு உண்டு. திசுக்கள் இயங்க, ஆக்சிஜன் தேவை. நாம் சுவாசிக்கும்போது, காற்றை உள்ளே இழுக்கிறோம். அதில் உள்ள ஆக்சிஜனை உள்வாங்கி ரத்தத்தில் கலக்கும் பணியை நுரையீரல் செய்கிறது. நம் உடலில் உள்ள உறுப்புக்கள் பயன்படுத்திய, கார்பன்-டை-ஆக்சைடு கலந்த காற்றை, ரத்தத்தில் இருந்து பிரித்து வெளியேற்றும் பணியையும் நுரையீரல் செய்கிறது. இப்படி, காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நோயை ஏற்படுத்துகின்றன.

நுரையீரல் கிருமித்தொற்று யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்?

முக்கியமாக ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 50 வயதைக் கடந்தவர்களுக்கும் நுரையீரல் கிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தும், நுரையீரல் முழு வளர்ச்சி பெறாமலும் இருக்கும் குழந்தைகளுக்கு, மிகச் சுலபத்தில் நுரையீரல் கிருமித்தொற்று ஏற்படலாம். இந்தத் தொற்று காரணமாக, மூளைக் காய்ச்சல்கூட வர வாய்ப்பு உண்டு. தவிர, சிகரெட், மதுப் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு நுரையீரல் கிருமித் தொற்று ஏற்படலாம். சிகரெட் பிடிக்கும்போது அதிலுள்ள நச்சுப் பொருள், நம் நுரையீரலைப் பாதித்து, கிருமிகள் தொற்றலாம். மது அருந்துவதால், ரத்தத்தில் நச்சு கலந்து சிறுநீரகங்களும், கல்லீரலும் பாதிக்கப்பட்டு, அது நுரையீரலில் தொற்று ஏற்படக் காரணமாகும். குடிபோதையில் வாயில் உள்ள சில கிருமிகள் நேரடியாக நுரையீரலை அடைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் 90 சதவிகிதம் இந்த நோயினால் தாக்கப்படலாம். ஹெச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நுரையீரல் தொற்று ஏற்படலாம்.

நுரையீரல் நோய்த்தொற்றை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

எக்ஸ்ரே மூலம் இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். கிருமிகள், காற்றில் பரவும் தன்மைகொண்டதால், மிகச் சுலபமாக ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும். கிருமி, நுரையீரலை அடைந்த பிறகு, ஓரிரு வாரங்களில் அதன் வீரியத்தைக் காட்டத் தொடங்கும். மூன்று - நான்கு நாட்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை வருத்தி எடுக்கும். பெரியவர்களுக்கு சில நேரங்களில் நெஞ்சு வலி ஏற்படும். சில சமயம் இருமலின்போது ரத்தம் கலந்த சளி வெளியேறும்.

இதற்கான தடுப்புமுறைகள் என்ன?
---------------------------------
நிமோனியாவைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை இன்ஃப்ளூயன்சா’ தடுப்பூசியும் அல்லது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை 'நிமோகோக்கல்’ தடுப்பூசியும் போடுவது நல்லது. இந்த நோயிலிருந்து மீண்டவர்களுக்கேகூட, திரும்பவும் இந்த நோய் வரலாம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். எனவே, கூடுதல் கவனம் தேவை!

சுத்தமா இருக்கக் கத்துக்கணும்!

பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யலாம். இதனால், நோய்கள் எளிதில் தாக்காது. சில சமயங்களில் நோயின் வீரியம் கடுமையாக இருக்கலாம். அந்த நேரத்தில் ஆன்டிபயாடிக்ஸ் ஊசிகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி போட்டுக்கொள்ளலாம்.

கையைக் கழுவுவது, தும்மும்போது கைக்குட்டையை மூக்கில் வைத்துக்கொள்வது என சில அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை, குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து, அதைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்

  WorldPneumoniaDay   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]