இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான திரைப்படமான பொன்னியின் செல்வனின் பட இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன் படி , அக நக என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார் மற்றும் இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்பாடல் மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கும் போஸ்டரில், த்ரிஷா மற்றும் கார்த்தி இடம் பெற்று உள்ளனர். த்ரிஷா கையில் வாளைப் பிடித்தபடி ராஜாங்கமாகத் தோற்றமளிக்கும் போது, கார்த்தி கண்ணை துணியால் கட்டி முழங்கால்களை மடக்கி படகில் முட்டிப்போட்டு இருக்கிறார்.
அக நக பாடலின் பிஜிஎம் ஏற்கனவே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உள்ளது. இந்த பாடல் அடிக்கடி ரீல்களில் பயன்படுத்தப்படுகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் தனது சமூக ஊடகங்களில், "அக நக பாடலின் மாயாஜாலத்தை அனுபவிக்க தயாராகுங்கள். இப்பாடல் மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும். காத்திருங்கள்! ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.