நடிகரும் இயக்குனருமான திருசெல்வம், 'மெட்டி ஒலி' சீரியலில் ஞானராஜ் வேடத்தில் நடித்து பின்னர் கோலங்கள் சீரியலை இயக்கினார். இப்போது மற்றொரு பிரபல சீரியலான எதிர்நீச்சல் நடிகர்களுடன் இணைந்துள்ளார்.
சீரியலுக்கு நெருக்கமான ஒருவர் முன்னணி ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், "ஜீவானந்தம் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் திருசெல்வம் நடிக்கவிருக்கிறார். விரைவில் அவர் சீரியலில் இணைவார். அவரது வருகை மூலம், பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் அதிக சுவாரஸ்யத்தைப் பார்ப்பார்கள்" என்றார்.
எதிர்நீச்சல் சீரியலில் இணைவது குறித்து நடிகரும் இயக்குனருமான திருசெல்வம் பேசுகையில், "எதிர்நீச்சல் என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் இணைவதில் ஆவலாக உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளேன். ஜி.மாரிமுத்து, கனிகா மற்றும் பிரியதர்ஷினி நீலகண்டன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். எனது புதிய பயணத்தில் அவர்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
எதிர்நீச்சல் பிப்ரவரி 2022 முதல் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொலைக்காட்சித் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன் மற்றும் ஹரிப்ரியா இசை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி. மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ் பிகே, விபு ராமன், சத்தியா தேவராஜன், பாம்பே ஞானம், மோனிஷா விஜய், ரித்திக் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ரத்தினம், ஃபர்சானா அன்சாரி, வைஷ்ணவி நாயக், சோம் சௌமியன், கீர்த்தனா மற்றும் வி.ஜே.தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் தொடரை வி.திருசெல்வம் எழுதி இயக்குகிறார்.